×

ஊழல் துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பெரியார் பல்கலை.யில் காத்திருப்பு போராட்டம்: பேராசிரியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஊழல் துணைவேந்தர் ஜெகநாதனை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்தப்பட்ட விசாரணையில், அப்போதைய கணினி அறிவியல் துறைத்தலைவரும், பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளருமான தங்கவேல் மீதான 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

தொடர்ந்து பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்தி உத்தரவிட்டார். ஆனால், துணைவேந்தர் ஜெகநாதன் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 29ம் தேதியுடன், பதிவாளர் தங்கவேல் ஓய்வுபெற்றார். இதனையடுத்து அரசின் உத்தரவை மதிக்காத துணைவேந்தர் ஜெகநாதனை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் தொழிலாளர் சங்க தலைவர் கனிவண்ணன், ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் மாஜி பதிவாளரை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் பல்கலைக்கழகம் பிற்போக்கு சிந்தனை உடைய துணைவேந்தர், பதிவாளர்களின் பிடியில் சிக்கி, தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் நிறுவனமாக மாற்றப்பட்டுவிட்டது.

இதற்கு ஆதரவாக கிண்டி மாளிகையில் ஒருவர் இருந்து கொண்டு, குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவரை சந்திக்க ஓடோடி வருகிறார். தமிழக அரசிடம் இருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ.200 கோடி வரை மானியம் பெற்றுக் கொண்டு, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளரின் உத்தரவை மதிக்காமல், அரசின் ஆணைக்கு செயல்படாத துணைவேந்தராக இருக்கிறார்.

அரசின் உத்தரவை செயல்படுத்தாத துணைவேந்தர் மீதும், நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முயற்சி செய்த மாஜி பதிவாளர் மீதும், தனியார் நிறுவனத்தை தொடங்க கையெழுத்திட்ட தற்போதைய பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுத்து, உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய நடவடிக்கை
சேலம் கருப்பூரில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன், கடந்த இரண்டரை ஆண்டுகளாக உள்ளார். வரும் ஜூன் 30ம் தேதியுடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் சார்பில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக பல்கலைக்கழகம் சார்பில் சிண்டிகேட், செனட் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பதிவாளர் (பொ) விஸ்வநாதமூர்த்தி, இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளார். வரும் 21ம் தேதி விருப்ப மனு பெறப்படுகிறது. அன்றைய தினமே மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து 3 பேர் அடங்கிய அந்த தேடுதல் குழு, பெரியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

சிண்டிகேட், செனட் பிரதிநிதிகளுடன், அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் தேடுதல் குழு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தனி அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஊழல் துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி பெரியார் பல்கலை.யில் காத்திருப்பு போராட்டம்: பேராசிரியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Department of Computer Science ,Pereyar University ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...